Friday, February 23, 2018

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த நபருக்கு அடித்தது ஜாக்பாட்: இத்தனை கோடியா?


தனது வீட்டு மாடியில் சிறிய ரக விமானங்களை உருவாக்கிய விமானிக்கு, மஹாராஷ்டிர அரசு ரூ.35,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை, அவரின் நிறுவனத்திற்கு அளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் அமோல் யாதவ், இவர், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மூத்த விமானியாக பணியாற்றி வந்தார்.
விமான துறையில் மிகுந்த ஆர்வமுடைய அமோல், கடந்த 2010ஆம் ஆண்டு ‘Thrust Aircraft Company' என்ற விமான நிறுவனத்தை உருவாக்கினார்.
மேலும், தனது வீட்டின் மொட்டை மாடியிலேயே, சிறிய ரக விமானத்தை தயாரிக்கும் பணிகளை தொடங்கினார்.
அதன் விளைவாக, கடந்த 2016ஆம் ஆண்டு 6 பேர் பயணிக்கும் வகையிலான, ஒரு சிறிய ரக விமானத்தை உருவாக்கினார்.

இதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவும் இவரை வியந்து பார்த்தது. அதனைத் தொடர்ந்து, அமோல் யாதவின் ஆறு ஆண்டுகால கடின உழைப்பை பாராட்டிய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம், அவரது விமானத்திற்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.

சமீபத்தில், விமான போக்குவரத்து ஆணையம், இவரது சிறிய ரக விமானம் வானில் பறக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மஹாராஷ்டிராவில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், அமோல் யாதவின் நிறுவனத்திற்கு, சிறிய ரக விமானங்களை தயாரித்து வழங்க, ரூ.35,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அமோல் யாதவின் நிறுவனம் மும்பையை அடுத்துள்ள பால்கர் மாவட்டத்தில், சுமார் 157 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த உள்ளது.
இங்கு அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையில், 19 பேர் பயணிக்கும் வகையிலான 1,300 சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நாட்டிலேயே விமானங்கள் தயாரிக்கும் முதல் மாநிலம், எனும் சிறப்பை மஹாராஷ்டிரா மாநிலம் பெற்றுள்ளது. அமோல் யாதவ், தனது விமானத்திற்கு VT-NMD என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்.

http://news.lankasri.com/entrepreneur/03/172504?ref=ls_d_others

No comments:

Post a Comment