Friday, February 17, 2017

பூவால் கோடீஸ்வரரான சுவாரசியம்…

கடின உழைப்பும், விடாமுயற்சியும் ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு, நாற்பது வயதான பொல்லப்பள்ளி ஸ்ரீகாந்த் அவர்களின், பூத்துக் குலுங்கும் வாழ்க்கை இதற்கு ஒரு சான்றாகும்.
தனது பதினாறு வயதில், ஆயிரம் ரூபாய் மாதாந்த ஊதியத்திற்கு, ஒரு பூப் பண்ணையில் வேலையில் சேர்ந்த ஸ்ரீகாந்த், இன்று இந்திய பூச்செடி வளர்ப்புத் துறையில், எழுபது கோடி, ஆண்டு வருவாயுடன் தன்னை நிலைப்படுத்தியுள்ளார்.
பள்ளிப்படிப்பு
பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்புடன் பாதியில் நிறுத்திக்கொண்ட அவர், தனது சொந்த ஊரான தெலுங்கானா, நிசாமாபாத் மாவட்டம், போதன் நகரத்திலிருந்து, தனக்குத் தெரிந்த ஒருவரின் பூப் பண்ணையில் வேலை செய்வதற்காக, பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களம் கிராமத்திற்கு வந்தார்.
தனது குடும்பம் விவசாயத்தைச் சார்ந்து இருந்ததாலும், அதிகளவில் கடன்பட்டிருந்த காரணத்தாலும், அவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல முடிவு எடுத்தார்.
flovewr
கடந்த காலம்
“எனது பெற்றோர் மற்றும் தங்கையுடன், போதனில் வசித்து வந்தேன். நான்கு பேர் கொண்ட எங்களது குடும்பத்தைக் கட்டிக்காப்பதற்கு, விவசாயத்திலிருந்து கிடைத்த வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு மேலும் தொடர்ந்து படிக்க விருப்பம் இருந்தபோதிலும், சம்பாதித்துக் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தேன்.” எனத் தனது கடந்த காலத்தை நினைவுகூருகிறார் ஸ்ரீகாந்த்.
flovewr.01
பூச்செடி வளர்ப்பு வணிகம்
இரண்டு வருடகாலம், நெலமங்களம் கிராமத்தில் தங்கி, தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை வேலைசெய்தார். இதனால், பூச்செடி வளர்ப்பு வணிகம் பற்றிய எல்லா நுட்பங்களையும் கற்றுக்கொண்டார் – சாகுபடி செய்தல், அறுவடை செய்தல், சந்தைப் படுத்தல் மற்றும் ஏற்றுமதிகள் பற்றியும் தெரிந்துகொண்டார்.
20,000 முதலீட்டுடன் துவங்கிய கதை
தான் வேலை செய்து சேர்த்த இரண்டாவது ஆண்டுச் சம்பளம் ரூபாய் பன்னிரெண்டாயிரத்துடன், மேற்கொண்டு தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சிறிது கடன் பெற்று, ரூபாய் இருபதாயிரம் முதலீட்டுடன், தனது பதினெட்டாவது வயதில், சொந்தமாக ஒரு சிறிய சில்லறை பூ வணிகத்தைத் தொடங்க ஸ்ரீகாந்த் முடிவு செய்தார்.
குடும்பம் ஆதரவு
இந்த முயற்சிக்கு ஆரம்பத்தில் அவரது குடும்பம் ஆதரவு கொடுக்கத் தயங்கியது, விவசாயத்தில் தனக்கு உதவியாக இருக்க, ஸ்ரீகாந்த் சொந்த ஊருக்குத் திரும்பி வர வேண்டும் என அவரது தந்தை விரும்பினார். ஆனால், ஸ்ரீகாந் தனது உள் மனது சொல்வதன் படி நடக்க முடிவுசெய்து, அவரது திட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்துச் சென்றார்.
flovewr.02
ஓம் ஸ்ரீ சாய் பிளவர்ஸ்
பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள, அவரது வீட்டில், 200 சதுர அடி இடத்தில், ‘ஓம் ஸ்ரீ சாய் பிளவர்ஸ்’ என்ற பெயரில் ஒரு பூக் கடையைத் தொடங்கினார். பூ பண்ணையில் வேலைசெய்த அனுபவமும், இரண்டு வருடகாலத்தில் அவருக்குக் கிடைத்த தொடர்புகளும், அவரின் புதிய வணிகத்திற்கு உறுதுணையாக அமைந்தது.
பேக்கிங் மற்றும் விநியோகம்
பூ சாகுபடி செய்பவர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து, பூக்களை வாங்கி, தானே அவற்றைப் பேக்கிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்தார். நாளுக்கு நாள் அவரது வாடிக்கையாளர் பட்டியல் பெரிதாகிக்கொண்டு சென்றது, திருமணங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளுக்கும் கூடப் பூ விநியோகம் செய்யத் தொடங்கினார்.
flovewr.03
“பூ சாகுபடி செய்பவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. அவர்களில் பலர் எனது அப்பாவின் வயதுடையவர்களாக இருந்த போதிலும் கூட, என்னையும், எனது வேலையும் அவர்களுடன் இணைத்துக் கொண்டனர். அவர்களில் சிலர், கடனுக்கும் கூட எனக்குப் பூக்கள் விநியோகம் செய்தனர்.” எனச் சொல்கிறார் ஸ்ரீகாந்த்.
பை-பேக்
வியாபாரம் முன்னேற்றமடைந்ததால், திரும்ப- வாங்குதல் (பை-பேக்) என்ற ஒப்பந்த அடிப்படையில், பூ சாகுபடி செய்பவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். முதல் ஆண்டிலேயே, ஐந்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தை அடைந்தார் மற்றும் அடுத்த ஆண்டில் அவரது வருமானம் இரட்டிப்பானது. அவரது இருபத்தைந்தாவது வயதில், ஆண்டு வருமானம் ரூபாய் ஐந்து கோடியை எட்டியது.
ஸ்ரீகாந்த் பண்ணை
2005 இல், பூச்செடி சாகுபடி செய்வதில் தனது கவனத்தைத் திருப்பிய ஸ்ரீகாந்த், பெங்களூரு கிராமப்புற மாவட்டம், தொட்டபாளபுரம் தாலுகா, துபக்கரை கிராமத்தில், 10 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு ஸ்ரீகாந்த் பண்ணை எனப் பெயரிட்டார். அவரது பூச்செடி வளர்ப்பு துணிகர முயற்சிக்கு வென்சாய் புளோரிடெக் எனப் பெயரிட்டார்.
அரம்பக்கட்டம்
ஆரம்பக் கட்டமாக, ஆறு ஏக்கரில் மட்டும் சாகுபடியைத் தொடங்கினார். 2009 -10 இல், அதே இடத்தைச்சுற்றி, மேலும் 30 ஏக்கர் வரை விரிவாக்கம் செய்தார், மற்றும் தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் குன்னூரில் மேலும் 10 ஏக்கர் நிலம் வாங்கினார். ஸ்ரீகாந்த், வங்கியில் ரூபாய் 15 கோடி கடன்பெற்று நிலத்தில் முதலீடு செய்தார்.
flovewr.04
3 கோடி மானியம்
2013 ஆண்டுமுதல், தேசிய தோட்டக்கலை வாரியத்திலிருந்து(என்.ஹெச்.பி), தனது ஆறு வேறுபட்ட திட்டங்களுக்காக, 3 கோடி வரை, அவருக்கு மானியமும் கிடைத்திருக்கிறது. அவரது பண்ணையிலிருந்து, சந்தைக்கு, பூக்களை எடுத்துசெல்வதற்கு ஒரு வாகனம் வாங்குவதற்காக, தேசிய தோட்டக்கலை வாரியம் அவருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கியது.
வெளி மாநிலங்களில் சாகுபடி
துபக்கரையில், 30 ஏக்கர் பரப்பில், கிரீன்ஹவுஸ் மற்றும் பாலிஹவுஸ் ஆகியவற்றில், ரோஜா, ஜெர்பேரா, கார்னேஷன் மற்றும் ஜிப்சோபிலா ஆகிய பூக்களை, ஸ்ரீகாந்த் சாகுபடி செய்கிறார். குன்னூரில், லில்லியம் மற்றும் கார்னேஷன் வளர்க்கிறார்.
எளிதல்ல
ஸ்ரீகாந்த் கூறுகையில் ” பூச்செடி சாகுபடி (புளோரிக்கல்சர்) என்பது, கண்ணுக்குத் தெரிவது போல அவ்வளவு எளிதானதல்ல. 100 சதவீதம் ஈடுபாட்டுடன், கவனத்துடன் செய்யாவிட்டால், உங்களால் பலனைப் பார்க்க முடியாது. நாற்று நடுதல் முதல் சந்தைப்படுத்தல் வரை, நீங்கள் முழுநேரமும் ஈடுபட வேண்டும்”. என்கிறார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
அவரது பண்ணையில் வளர்க்கப்படும் பூக்கள், அவரது வியாபாரத்தில், வெறும் 10 சதவீதமே பங்களிப்புச் செய்கிறது, தேவை மற்றும் விநியோக இடைவெளியைப் பூர்த்திசெய்ய, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பூக்களைக் கொள்முதல் செய்கிறார். மேலும், பற்றாக்குறையைச் சந்திப்பதற்கு, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஹோலந்த் ஆகிய நாடுகளிலிருந்தும் பூக்களை இறக்குமதி செய்கிறார்.
ஏற்றுமதியும் வெளிநாட்டு பயணங்களும்
இவரது பூக்கள் நாடு முழுவதிலுமுள்ள சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன, அதுபோல், துபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதுமுள்ள பூச்செடி சாகுபடி பற்றி அறிந்து கொள்வதற்காகவும், அவரது பண்ணைகளில் பயன்படுத்தும், புதிய பண்ணை நுட்பங்களைத் தெரிந்துகொள்வதற்காகவும், இதுவரை 20-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஸ்ரீகாந்த் சென்றுள்ளார்.
” எனது 22வது வயதில், முதல் வெளிநாட்டுப் பயணமாக ஐரோப்பாவிற்குச் சென்றேன். பல்வேறு நாடுகளிலுள்ள, பூ வளர்ப்புப் மையங்கள் மற்றும் ஏல விற்பனை நிலையங்களைப் பார்வையிடத் தொடங்கினேன், இதன்மூலமாக இது பற்றிய நல்ல அறிவைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.” என்கிறார் அவர்.
மழைநீர் சேகரிப்பு
ஸ்ரீகாந்த், தனது பண்ணையில் மழைநீர் சேகரிக்கிறார். ” ஒரு நாளைக்கு, நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் எங்களுக்குத் தேவை, நல்ல மழை இருக்கும் போது, நீரைச் சேகரித்து, சுமார் எட்டு மாதங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.” என்கிறார்.
ஊழியர்கள்
ஸ்ரீகாந்தின் பண்ணைகளிலும், வில்சன் கார்டனில் உள்ள அவரது அலுவலகத்திலும், 300 பேர் வரை வேலைசெய்கின்றனர். ஸ்ரீகாந்த், அவரது பண்ணையில் வேலைசெய்யும் சுமார் 80 பேருக்கு, உணவும், தங்குமிட வசதியும் வழங்குகிறார்.
” சுமார் 300 பேருக்கு வேலைக் கொடுக்க என்னால் முடிகிறது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது சொந்த ஊர் மக்களுக்கும் என்னால் வேலைக் கொடுக்க முடிகிறது.” என்கிறார் ஸ்ரீகாந்த்.
திருமணம்
2002 இல், ஐதராபாத்தைச் சேர்ந்த, ராகா ஸ்ரீவந்தி என்பவரை ஸ்ரீகாந் திருமணம் செய்தார். அவரது வெற்றிக்கு, அவரின் மனைவி பெரிய ஆதரவாகவும், வலிமையாகவும் இருந்து வருகிறார். அலுவலகக் கணக்குகளைக் கவனித்துக் கொள்வதுடன், வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு, ஆடர்கள் எடுத்து, அவரது வணிகத்திற்கு உதவியாக அவரது மனைவி உள்ளார் என்பது பெருமையளிக்கிறது.
குழந்தைகள்
ஏழாம் வகுப்பு படிக்கும் அவர்களது மகள் மொக் ஷெரீ மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் அவர்களது மகன் ஹர்ஷாவர்தன், இருவரும் கூட விவசாயத்தில் பற்றுள்ளவர்கள், வார விடுமுறை நாட்களில், தங்களது பெற்றோர்களுடன் பண்ணைக்குச் சென்று, உதவி செய்வது அவர்களின் வழக்கம்.
flovewr.05
பெங்களூர் வாழ்க்கை
” நான் பெங்களூருவிற்கு வந்த போது, எனக்குத் தெலுங்கும், ஹிந்தியும் மட்டுமே தெரிந்திருந்தது. பல்வேறு இடங்களைச் சார்ந்த, சாகுபடியாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன், தினம் தினம் பேசுவதன் மூலம், ஆங்கிலம் உட்பட, மேலும் ஐந்து, ஆறு மொழிகள் கற்றுக்கொள்ள முடிந்தது. எனது வணிகத்தில், இது எனக்கு மிகவும் உதவியாக அமைந்தது.” என்கிறார் ஸ்ரீகாந்த்.
வாழக்கை சுருக்கம்
தனது வாழ்க்கையைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகையில், தனது சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று, “ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஏக்கம்”தான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஸ்ரீகாந்த்.
” நமது இளைய தலைமுறையினர் பெரிய கனவுகள் கண்டு, தேவையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இளைய தலைமுறையினரால் மட்டும்தான், தடைக்கற்களைத் தகர்த்து, அவர்களுக்குள் சுதந்திரத்தைச் சுவாசித்து, அவர்களுக்காக, புதிய மற்றும் வேறுபட்ட அம்சங்களை உருவாக்க முடியும்” என்கூறி முடிக்கிறார் ஸ்ரீகாந்த்.
- See more at: http://www.canadamirror.com/canada/81121.html#sthash.nSmAF7eo.Uun4qE1U.dpuf

No comments:

Post a Comment